சோலையாண்டவர் திருக்கோயில் ஸ்தல வரலாறு

கோவில் / விழா நடைமுறைகள் / சோலையாண்டவர் திருக்கோயில் ஸ்தல வரலாறு

சோலையாண்டவர் திருக்கோயில் ஸ்தல வரலாறு
கொத்தரி - பள்ளத்தூர்

சொற்பதம் கடந்த சோலையாண்டவர்

கோனாபட்டு கள்ளணன் - பிள்ளைப் பெருமாள் கோயிலில் நான்கு ஐயனார் மூர்த்தங்கள் கருவறையில் இருக்கக் கண்டோம்; பின்னர் நாம் செல்லவிருக்கும் கருவியப்பட்டியில், இரு ஐயனார் சந்நிதிகள் இருக்கின்றன; ஆனால் இப்போது நாம் வந்துள்ள சோலை யாண்டவர் கோயிலில் உள்ள மூலவர், மூன்று ஐயனார்கள் இணைந்தவர் என்று கூறப்பெறுகிறது. 1 சோலையாண்டவர் என்றே பொதுவாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆவணங்களில் உள்ள பெயர் சோலை வளர்த்த ஐயனாராம்!, இந்த ஐயனாருடன், பாலை வளர்த்த ஐயனார், குருந்தய்யனார் என மொத்தம் மூன்று ஐயனார்கள், இந்த மூர்த்தத்தில் சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அடுத்து நாம் செல்லவிருக்கும் கோயில், பாலை வளர்த்த ஐயனார் கோயிலே. அங்கு வேறு விதமானதொரு தகவல் தெரிவிக்கின்றனர். அதை அங்கு செல்லும்போது. அங்குள்ள அர்ச்சகரே கூறக் கேட்போமே?

காளி, கறுப்பர் கோயில்களில்தான், மூலவரை நேரில் வழிபடப் (பருவம் எய்தாத சிறுமியர், மூப்படைந்த மூதாட்டியர் தவிர்த்த) பெண்களுக்குத் தடை விதிக்கப்பெற்றிருப்பதாக நினைக்க வேண்டாம். இங்குள்ள ஐயனார் சந்நிதியிலும் அந்தத் தடை நடைமுறையில் இருக்கிறது. இந்த ஐயனார், தனியாக - யோக சாஸ்தாவாக இருப்பதால், (சபரிமலை ஐயப்பன் கோயில் போன்று) இங்கும் இந்தத் தடை நிலவுவதாகச் சொல்கின்றனர். தமக்குத் துணையாகப் பெரிய கறுப்பர், சந்நியாசி, பிரமர், முனீஸ்வரர் - எல்லோருமே தனியாகத் தவநிலையில் உள்ளோர்தாமே! – ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு, அனைவரும் பருவமடைந்த பெண்கள் தங்களைப் பார்க்காதவண்ணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

சந்நிதி (மண்டபத்துக்கு) வெளியே நின்று. இந்தப் பெண்கள், மானசீகமாகத்தான் ஐயனார், கறுப்பர் ஆகியோரை வழிபட வேண்டும். பொங்கல், ஆண்டுப் பிறப்பு, மற்றும் உற்சவ நாட்களில், மண்டபத்தில் உற்சவ விக்கிரகங்கள் வைக்கப்பெற்றிருக்கும்; வெளியே நின்று வழிபடுவோர். அந்த நாட்களில் மட்டும் அவற்றை வேண்டுமானால் கண்டு வழிபடலாம். (அவர்கள் எழுந்தருளிகள் தாமே. அதனால் அவர்களுக்குத் தொடக்கு (தீட்டு)க் கிடையாது!) இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்கிறோம்; ஆன்மாவுக்கு ஆண் - பெண் பேதம் கிடையாது. அழியும் இவ்வுடலில் தான் அந்த வேறுபாடு என்கிறோம். ஆனால் எல்லா உயிர்களுக்கும் பொதுவான இறைவனை வழிபடுவதில், ஆண் பெண் வேற்றுமை பாராட்டுகிறோம்! தீண்டத்தகாதோர் என ஒரு பிரிவினரைத் தோற்றுவித்து, அவர்களை ஆலயங்களுக்குள் நுழைய விடாமல் செய்த பெருங்கொடுமை கூடக் களையப்பெற்று விட்டது. ஆனால் பெண்களுக்கு விதிக்கப்பெறும் - இழைக்கப்பெறும் இந்தக் கொடுமைக்கு இன்னும் மு(வி)டிவு ஏற்படவில்லை. பரம்பொருளின் பெருங்கோயில்களில் கூடக் காணப்பெறாத இந்த அநீதி, குலதெய்வக் கோவில்களில் மட்டும் ஏன் நிலவ வேண்டும் ? (சபரி மலை சாஸ்தா கோயிலில் நிலவும் விதிமுறைகளை நாம் ஏன் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டும்?)

நம் கோயில்களில் அர்ச்சகர்கள் மேலாடை அணியாதுதான் இறைவழிபாடுகளைச் செய்கின்றனர்; ஆனால் குளிர் நிறைந்த திருக்கேதாரம். பத்ரிநாத் போன்ற இடங்களில் உள்ள மிக உயர்ந்த சைவ- வைணவ ஆலயங்களில், அர்ச்சகர்கள் காலுறைகூட அணிந்துதான் பூஜைகளைச் செய்கின்றனர். காரணம், அங்குள்ள தட்ப-வெப்ப நிலை அப்படி!

இங்குமே பல ஐயனார் கோயில்களில் மூலவர் தனியாக -யோக சாஸ்தாவாக இருக்கிறார். பிரபலமான கறுப்பர் சந்நிதிகள், காளி சந்நிதிகள் உள்ளன. ஆனால் அவற்றில் பெண்களுக்கு எந்தத் தடையும் இல்லையே! ஒரு சில கோயில்களில் மட்டும், ஐயனாரை கறுப்பரை - காளியை நேரில் காணக்கூடாத அளவுக்கு, நம் பெண்கள் செய்த - செய்யக்கூடும் என்று கருதப்பெறும் பெருந்தவறுதான் என்ன? சமுதாய - ஆன்மிகப் பெரியவர்கள் சிந்திக்க வேண்டும். இராயவரம், கடியாபட்டி, காரைக்குடி, கானாடுகாத்தான், கோட்டையூர், நற்சாந்துபட்டி, நேமத்தான்பட்டி, பள்ளத்தூர் (மாத்தூர் கருப்பூர்ப் பிரிவினரும், இரணிக்கோயிலாருமாக 200 புள்ளிகள்) ஆகிய ஊர்களைச் சேர்ந்த மொத்தம் சுமார் 300 புள்ளிகளும், வல்லம்பர்களும் இக்கோயிலைக் குலதெய்வக் கோயிலாகக் கொண்டுள்ளனர் என்று கூறப்பெறுகிறது.

ஏழு ஊர் இரணிக்கோயிலார் இங்கு வழிபடுவதாகக் கூறப்பெறுவதில், அவர்கள் எந்தெந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்பெறவில்லை.

காரைக்குடியிலிருந்து பள்ளத்தூருக்குச் செல்லும்போது, பள்ளத்தூரில் ஊரின் நடுவில் கொத்தரி என்னும் பெயர் அறிவிப்புப் பலகை உள்ள இடத்தில் இடப்புறம் திரும்பிச் சுமார் ஒரு கி.மீ தொலைவு கப்பிச் சாலையில் சென்று, தொடர்ந்து நேரே செல்லும் மண் சாலையில் சிறிது தொலைவு சென்றால், திருக்குளமும் அதன் இடப்புறம் கோயிலும் உள்ளன. பெயருக்கேற்பச் சோலையாகத் திகழும் பகுதியில் கோயில் அமைந்திருக்கிறது.

திருக்குளத்தை ஒட்டி விநாயகருக்குச் சிறிய கோயில் ஒன்று அமைந்திருக்கிறது. யானை, பலிபீடம் ஆகியவை உள்ள அஸ்பெஸ்டாஸ் கூடத்தைத் தாண்டிக் கல் திருப்பணி செய்யப்பெற்ற மகா மண்டபமும், கருவறையும் உள்ளன.

யோக சாஸ்தாவான சோலையாண்டவருக்குப் புத்தாண்டு நாளன்று நடைபெறும் பூச்சொரியல் மிகப் பிரபலமானது. அருகிலுள்ள பல ஊர்களிலிருந்தும், தொலைவில் நற்சாந்துபட்டியிலிருந்தும் கூடப் பூத்தட்டுகள் ஏந்திவரப் பெறுகின்றன.

சித்திராப் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் அஷ்டமியில் காப்புக் கட்டிப் பத்து நாள் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகிறது. கொத்தரியில் மண்டகப்படிகள் நடைபெறுகின்றன. பௌர்ணமி அன்று கரியப்பட்டியிலிருந்து புரவிகள் புறப்பட்டுப் பத்தாம் நாள் கோயிலை அடைகின்றன.

தைப் பொங்கலும், மகா சிவராத்திரியும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றன. சிவராத்திரியின்போது காவடி எடுப்பது உண்டாம். ஊமக்குறும்பன், குறும்பையனார் என்னும் பெயர்களையும் கொண்ட சோலையாண்டவருக்குப் புரட்டாசி மாதத்தில் இலட்சார்ச்சனை நடைபெறு கிறதாம்.

கருவறையின் வலப்புறத்தில் பெரிய கறுப்பர், சின்னக் கறுப்பர் சந்நிதிகள் இடம் பெற்றிருக்கச் சன்னாசி, கலிக்காளி, தட்சிணா மூர்த்தி, பட்டவர், சின்னான் ஆகியோர், சின்னக் கறுப்பர் சந்நிதியை ஒட்டி உள்ளனர். சன்னாசி முதலியவை மண் சிலைகளே.

கோயிலின் வலப்புறத்தில் உள்ள இரு மேடைகளில் ஒன்று பிரமருக்குரியது. மேடையில் நடுகல் காணப்பெறுகிறது. மேடையின் கீழே பாதகுறடுகள் உள்ளன. அதன் வலப்புறத்தில் உள்ள மேடை, சாத்தப்ப செட்டியார் என்பவருக்காக அமைந்தது. இங்கு அடக்கமாகிய இந்தச் செட்டியாரின் மேடைக்கு அன்றாடம் பூசை நடை பெறுகிறதாம்.

அடுத்துத் தல மரமான பாலை மரத்தை ஒட்டியுள்ள சந்நிதியைக் காளியம்மனாக வழிபடு கின்றனர். மார்பளவு கம்பி அடைப்புடன் கூடிய இந்த அஸ்பெஸ்டாஸ் கூடத்தில், காளியம்மனின் சிலை வைக்கவோ, விமானத்துடன் கூடிய சந்நிதி அமைக்கவோ, திருவருட் சம்மதம் கிடைக்க வில்லையாம்.

கோயிலின் இடப்புறத்தில் மண் சிலைகளான அடைக்கலங்காத்த ஐயனார், சப்த கன்னியர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஐயனார் சிலை இக்கோயிலின் ஆதி மூர்த்தமாக இருக்குமோ என்னவோ?

திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இங்கு காலை ஏழு மணிக்குக் கோயில் திறக்கப்பெற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு உச்சிக் காலமும், இரவு ஏழு மணிக்கு மற்றொரு பூசையும் நடைபெறுகின்றன. மற்ற நாட்களில் காலையில் ஒன்பது மணி முதல் பதினொன்றரை வரையிலும், பிற்பகலில் மூன்று மணி முதல் ஐந்தரை மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு நாளும் இருகாலப் பூசை நடைபெறுகிறது. திங்கட்கிழமை மட்டும் இரவு ஏழு மணிக்குப் பலி கொடுக்கப்பெறுமாம்.

வல்லம்பர்களின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் நகரத்தார் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பிறந்து ஓராண்டு கழித்து முடி இறக்குவதும், தொட்டில் கட்டுவதும் உண்டாம். இக்கோயிலை வழிபடுவோர், மூலவரின் பெயரை ஒட்டிச் சோலையப்பன். சோலை, சோலைச்சி என்னும் பெயர் களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுகின்றனர்.

கொத்தரி நாட்டார், மற்றும் நகரத்தார்களால் திருப்பணி செய்யப்பெற்று, 11.01.1992ல் இரண்டாவது முறையாக இங்கு திருக்குட நீராட்டு நடைபெற்றிருக்கிறது. முதல் குடமுழுக்கு. அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்கலாம் என நம்பப்பெறுகிறது.

கிராம மக்கள் பேரளவில் இங்கு வந்து விதைப்புக் கொடுத்துப் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

சோலை வளர்த்த ஐயனார்

பள்ளத்தூர் அருகில் நான்கு நகரத்தார் குல தெய்வங்களான ஐயனார் கோவில்கள் உள்ளன. முதலாவது வடகுடி நெல்லியாண்டவர் கோவில். இந்த கோவிலில் ஓசைமணிக்காளி மிகவும் சக்தி வாய்ந்தது. இரண்டாவது அருகிலே உள்ள பாலை வளர்த்த ஐயனார் கோவில்.

மூன்றாவது கரியப்பட்டி கரிய ஐயனார் கோவில். இந்த கோவிலில் ஆங்கிலேயர் காலத்தில் மண் குதிரை புல் தின்றதாகவும், அதற்காக சவால் விடுத்த ஆங்கிலேய அதிகாரி சொல் தவறாமல் சிரச்சேதம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நான்காவது சோலையாண்டவர் கோவில். இவர் சோலை வளர்த்த ஐயனார் எனவும் போற்றப்படுகிறார். சோலை போன்ற பகுதியில் அமர்ந்துள்ள இவர் ஐயப்பனை போல் தோற்றமளிக்கிறார். இவரைப் பற்றி சோம. லெ.அவர்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளார். பருவமடைந்தவர்கள் சன்னிதிக்குள் சென்று வழிபடக்கூடாது. சித்திரையில் விமரிசையாக திருவிழா நடைபெறும்.

பௌர்ணமி அன்று நடைபெறும் கூத்து, ஆறாவயல் கூத்துபோல் இருக்கும் எனக் கூறுவர். இங்கு நடக்கும் சப்தாபரண மண்டகப்படிக்கு முன்பதிவு செய்து மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழ் வருடப் பிறப்பு அன்று பூத்தட்டுக்கள் சமர்ப்பிக்கப்படும். நற்சாந்துபட்டி போன்ற தூரத்து ஊர்களில் இருந்து பூத்தட்டுக்கள் வந்து செலுத்தப்படும்.

Book Credits: எஸ்ஸாரம் பழநியப்பன் மலேசியா


விழாக்கள்