தனவணிகர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், சோழப்பேரரசின் வணிகத் துறைமுக நகரமான காவிரி பூம்பட்டினத்தில் இருந்து கிபி 13 ஆம் நூற்றாண்டு வாக்கில் பாண்டிய நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள். இந்த நகரத்தார்கள் சமூகம் தங்களுக்கென ஒரு தனி பாரம்பரியத்தைக் கொண்டது. சைவத்தை தழுவிய நகரத்தார்கள் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை தலைவராக ஏற்று வணங்குபவர்கள். ஊன், உடம்பு, அநித்தியம் என்ற கருத்தில் வேரூன்றியவர்கள். தாங்கள் அறவழியில் ஈட்டிய பொருளை தெய்வத்தொண்டின் மூலம் மக்களின் மனங்களை செம்மைப்படுத்தும் நோக்குடன் சிவ ஆலயங்களை உருவாக்குவதிலும், நலிந்த ஆலயங்களை புனரமைப்பு செய்வதிலும், அதை நிர்வகிப்பதிலும் முழு மனதுடன் ஈடுபடுபவர்கள். மாறிவரும் சமுதாய மாற்றத்திற்கு ஏற்ப அனைவருக்கும் கல்வி அறிவு கிடைக்க வழி வகுப்பதிலும் முன் நின்றவர்கள் தொடர்ந்து முன் நிற்பவர்கள். புலம் பெயர்ந்த நகரத்தார்களுக்கு பாண்டிய மன்னனால் 9 சிவன் கோயில்கள் நகரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகரத்தார்கள் அந்த 9 கோயில், அதன்உட்பிரிவுகளை சார்ந்து அறப்பணிகளை செய்து வருகிறார்கள். இதில் ஐந்து கோயிலைச் சார்ந்த நகரத்தார்கள் (இலுப்பக்குடி, வைரவன் கோயில், இளையாத்தாகுடி, பிள்ளையார்பட்டி மற்றும் மாத்தூர்) திருமலை சமுத்திரம் என்னும் நச்சாந்துபட்டியில் சுமார் 17 ஆம் நூற்றாண்டில் இருந்து வசித்து வருகிறார்கள்.
நகரத்தார்கள் நச்சாந்துபட்டிக்கு புலம்பெயர்ந்து வந்த போது இங்கு அரச மரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் ஒன்றே வழிபாட்டு தெய்வமாக இருந்து வந்தது. இது இன்று சின்ன ஊரணி பிள்ளையார் என்று அனைத்து ஜாதி மக்களின் வழிபாட்டில் இருந்து வருகிறது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கு இணங்க திருமலை சமுத்திரம் என்ற நச்சாந்துபட்டி நகரத்தார்கள் 1903 ஆம் ஆண்டு வாகில் தாங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சிவன் கோயிலை கட்ட புதுக்கோட்டை மன்னரிடம் இருந்து இட ஒதுக்கீடு பெற்றார்கள். பின் அனைத்து நகரத்தார்களின் பங்களிப்புடன் பெரிய கற்கோயிலாக சிவகாமி அம்மாள் உடனுறை சிதம்பரேசுவரர் திருக்கோயிலை 1928 ஆம் வாக்கில் உருவாக்கி நகரத்தாரின் வழிபாட்டுக்கு கொண்டு வந்தார்கள்.
நச்சாந்துபட்டியில் வசித்து வந்த இந்த 5 கோயில் நகரத்தார்கள் மூலம் மேற்படி கோயிலை உருவாக்கி ஒவ்வொரு கோயிலில் இருந்தும் ஒரு காரியக்காரரை நியமனம் செய்தார்கள். ஒரு வருட சுழற்சி முறையில் ஒவ்வொரு காரியக்காரரும் கோயில் பூசைகள், விழாக்களை தொய்வின்றி நடத்த ஏற்பாடு செய்தார்கள்.
வாழ்வாதாரம் மேம்பட ஆரம்பித்த உடன், கோயிலுக்கான தர்ம சொத்துக்கள் பெருக ஆரம்பித்தது. பெருகிவரும் பொது சொத்துகளை பாதுகாத்து, ஆக்கப்பூர்வமான வழியில் பெருக்கி நிலையான தர்மங்களை தொடர்ந்து செய்ய நகரத்தார் சங்கம் என்ற புது அமைப்பு 1978 ஆம் ஆண்டு வாகில் உருவாக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் ஒரு வருட சுழற்சி முறையில் நடப்பு காரியக்காரருடன் இணைந்து பொது சொத்துக்களை பாதுகாக்க இந்த அமைப்பு உறுதி செய்கிறது. இதன் மூலம் சிவன் கோயிலில் ஐந்து கால நித்திய பூஜை தங்கு தடை இன்றி நடக்கவும், ஆலயத்தை 12 வருடத்திற்கு ஒரு முறை திருக்குட நன்னீராட்டு செய்வது ஆகம விதிகளை பாதுகாப்பது போன்ற பல வானோங்கிய தர்மங்களையும் தானாகவே நடக்க வழி வகுத்து இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
இதில் மேலும் ஒரு மகுடமாக நம் நகரத்தாரின் சீரிய முயற்சியோடும், பங்களிப்போடும், மண்ணில் நல்ல வண்ணம் எல்லா உயிர்களும் வாழுமாறு பால் வண்ணம் ஊட்டும் தாயினும் சாலப் பிரிந்த சிவகாமி அம்மை உடனுறை சிதம்பரேசுவரருக்கு, எழில் மிகு கல் மண்டபத்துடன் கூடிய ராஜகோபுரம் எழுப்பி அத்துடன் திருக்குட நன்னீராட்டு (2021ஆம் ஆண்டு) செய்து, அனைவரும் அருள் பெற்றது என்பது ஒரு மனநிறைவானதும் , மகிழ்ச்சியானதுமனா நிகழ்வு.
அரசர்கள் காலத்திற்குப்பின்பு ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர்கள் நகரத்தார்கள் என்று காஞ்சி மாமுனிவரால் பாராட்டப்பட்டவர்கள். நமது சிவன் கோயில் விழாக்கள் அனைத்தும் நம்மூர் பெரியோர்களாலும் நமது நகரத்தார் சங்கத்தின் வழிகாட்டுதலோடு மிகச் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . நம்மூர் நகரத்தார்கள் உலகில் எல்லா இடங்களுக்கும் சென்று தொழில் செய்து சிறப்புற்று வாழ்வதோடு மட்டுமல்லாது நம்ம ஊர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்கிறார்கள் இவர்கள் தொழில் கருதிச்சென்ற அயல் நாடுகளின் பொருளாதரத்தையும் பன் மடங்கு வளர்த்தவர்கள். சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்து, சமய உணர்ச்சியை பரப்பி, புராதனக் கலைச்செல்வத்தைப் போற்றி தமிழகத்தின் பண்டையப்பெருமை, பண்பாடுகளை பாதுகாத்து கால மாறுதலுக்கேற்பத் புத்துணர்வுடனும், விழிப்புணர்வுடனும் தாமும் பொருந்திக்கொள்ளும் மனோபலம் மிக்கவர்கள்.
மொழி, தேச அமைப்பு தெரியாத இடங்களில் கூட மனத்துணிச்சலுடன் கடல் கடந்து சென்று மனதில் கொண்ட காரியங்களை அற்புதமாக, சாமர்த்தியமாக சாதித்துக்காட்டியவர்கள் நம் ஊர் நகரத்தார்கள்.
தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நம் நகரத்தார் பெருமக்கள் நம் ஊரைப் பற்றியும் சிறப்புகளை பற்றியும் தெரிந்து கொள்வதற்கும் இனிவரும் காலங்களில் விழாக்கள் நடத்த உதவியாக இருப்பதற்கும் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது எங்களால் முடிந்தவரை எல்லா விவரங்களையும் சேகரித்து இதில் பதிவிடுகிறோம்.
நகரத்தார் சங்க காரியகமிட்டி
2022 -2023