விநாயகர் சதுர்த்தி விழா நடைமுறைகள்

கோவில் / விழா நடைமுறைகள் / விநாயகர் சதுர்த்தி விழா நடைமுறைகள்

விநாயகர் சதுர்த்தி விழா நடைமுறைகள்

அ. முதல்நாள் ஏற்பாடு செய்ய வேண்டியது:

1. உற்சவர் வெள்ளி அங்கி எண்டோவ்மென்ட் பெட்டகத்திலிருந்து எடுத்து சுத்தம் செய்து வைக்கவேண்டும்.

2. சின்ன ஊரணி பிள்ளையாருக்கு அங்கி சாத்துவது என்றால் அங்கியையும் மேற்படி பெட்டகத்திலிருந்து எடுத்து சுத்தம் செய்து வைக்கவேண்டும்.

3. தீ வட்டிக்கு, சிண்டு குறைந்தபட்சம் 8 தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

4. உற்சவமூர்த்தி பிள்ளையார் திருவாச்சி சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

5. மூஷிக வாகனம் எடுத்து சுத்தம் செய்து தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு அருகில் வைக்க வேண்டும்.

6. சதுர்த்தி அன்று விநாயகர் சுற்றிவர மூஷிக வாகனத்திற்குரிய கம்பு,கயிறு போன்றவற்றை சரி பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

7. சித்திர வயல் கிராமத்தாருக்கு சாமி தூக்க வரச்சொல்லி விட வேண்டும்.

8. சின்ன ஊரணி பிள்ளையார், பிரகார பிள்ளையார் கர்ப்பக்கிரகம் திருவாச்சி, விளக்கு அனைத்தையும் சுத்தம் செய்து வைக்கவேண்டும்.

9. உபயதாரர்களிடமிருந்து பிரசாதம் போடுவதற்கு சாமான்களை வாங்கி ஒத்துப்பார்த்து சுயம்பாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

10. உபயதாரர் அபிஷேக சாமான்கள் கொடுப்பதை உக்கிராணத்தில் ஒப்படைக்க வேண்டும்.

11. கோலம் போடுவதற்கு உபயதாரர்களுக்கு வேண்டியன செய்து கொடுக்க வேண்டும்.

12. சோடோபசார செட் வெள்ளி உருப்படிகளுக்கு திரிபோட்டு தயாராக வைக்க வேண்டும்.

13. குடவரை பிள்ளையார் சதுர்த்தி உபயதாரருக்கு தெரியப்படுத்தி பிரசாதம் போடுவதற்கு சாமான்கள் வாங்கி சுயம்பாகதிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆ . விநாயகர் சதுர்த்தி உற்சவம்

உற்சவத்தன்று காலை செய்யவேண்டியது:

1. காலை 9.00 மணிக்குள் குடைவரைப் பிள்ளையாருக்கு அபிஷேகம் சந்தனகாப்பு, அர்ச்சனை முதலியவற்றை உபயதாரர் ஒத்துழைப்போடு முடித்துக் கொள்ள வேண்டும்.

2. அபிஷேக சாமான்கள் ஒத்துப்பாத்து அதற்கு தேவையான பாத்திரங்களில் எடுத்து வைக்க வேண்டும். (பிரகாரப் பிள்ளையாருக்கு அருகில் )

3. ஜபத்திற்கு குடம்நூல் சுற்றி வைக்க வேண்டும். மாவிலை பறித்து பறித்து வைக்கவேண்டும். மனைகள் எடுத்து வைக்க வேண்டும். அதற்குரிய விளக்கு எடுத்து வைக்க வேண்டும்.

4. ஜபத்துக்கு உள்ள சாமான்கள் உபயதாரரிடமிருந்து வாங்கி குருக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். நெல் கோவிலில் இருந்து எடுத்து வைக்க வேண்டும் .

5. புஷ்பம், மாலை முதலியவைகளை சரி பார்த்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

6. உபயதாரர் ஜபத்திற்கு உரிய நேரத்தில் வருவதற்கு உறுதி செய்ய வேண்டும்.

7. காண்டாமணி அடித்து ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.

8. பிரகாரப்பிள்ளையாருக்கு அபிஷேகங்கள் செய்து, புதுவஸ்திரம் சாற்றி, அங்கிகள் சாற்றி புஷ்ப அலங்காரம் செய்து, சாம்பிராணி தூபம் போட்டு நெய்வேத்தியம் செய்து திரை எடுக்கும்போது வெள்ளி அலங்கார தீபம், கும்ப தீபம், ஒற்றை தீபம், காட்டி உபயதாரர்களிடம் சங்கல்பம் பண்ணி அர்ச்சனை முடிந்தவுடன் ஏழுமுக தீபத்தை ஏகதீபமாக காட்டி முடிக்கவேண்டும்.

9. பின்னர் மூஷிக வாகனத்தில் உற்சவ பிள்ளையார் திருவாச்சியுடன் தட்சிணாமூர்த்திக்கு எதிரில் கிழக்கு பக்கம் பார்த்து வைத்து, வஸ்திரம், புஷ்பம் சாத்தி பெட்டி தீபம் வைத்து உபயதாரர்களிடம் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து ஏழுமுகம் தீபம் காட்டி அனைத்து பக்தர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

10. விபூதி பிரசாதம் நகரத்தார் schedule-A முறைப்படி வழங்க வேண்டும்.

11. மேற்படி இரண்டு காளாஞ்சியையும் உற்சவ மூர்த்தி முன்னாள் உபயதாரருக்கு வழங்கவேண்டும்.

12. பிரகார பிள்ளையார் அங்கி சாத்தி உள்ளதால் கர்ப்பக்கிரக கதவு பூட்டி காவல் வைத்து செல்ல வேண்டும்.

13. உபயதாரர்களிடமிருந்து வந்த பிரசாதம் பக்தர்களுக்கு உபயதாரர்களால் வழங்கப்பட வசதி செய்து கொடுக்க வேண்டும்.

14. சின்ன ஊரணி பிள்ளையாருக்கு அபிஷேக சாமான், வெள்ளி ஏழுமுக தீபம், பூஜை சாமான், புஷ்பம், வஸ்திரம் முதலியவைகளை அர்ச்சகர் மேளகாரர்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

15. சின்ன ஊரணியில் பிள்ளையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அங்கி (அங்கி சாத்துவது காரியக்காரர் முடிவு செய்ய வேண்டும்) புஷ்பம் சாற்றி நெய்வேத்திய தூப தீபம் காட்டி. பின் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து வெள்ளி ஏழுமுக தீபம் காட்டி. மேற்படி ஏழுமுக தீபத்தை அனைத்து பக்தர்களுக்கும் எடுத்துச் சென்று பின் நகரத்தார் schedule-A முறைப்படி விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும்.

16. சின்ன ஊரணியில் பிள்ளையாருக்கு அங்கி சாற்றி இருந்தால் அதை கழட்டி எடுத்துக்கொண்டு பின் பிரகார பிள்ளையார் அங்கியையும் கழட்டி, பெட்டகத்தில் திரும்ப வைக்க வேண்டும். சோடோபசார தீபங்களை சரிபார்த்து எடுத்து வைக்கவேண்டும்.

17. மடப்பள்ளி பிரசாதங்களை உபதாரர்களிடம் கொடுக்க வேண்டும்.

உற்சவத்தன்று மாலை செய்ய வேண்டியது:

1. உற்சவ பிள்ளையார் மூஷிக வாகனத்தில் ஏற்றி கயிறு கட்டி அங்கி புஷ்பம் சுற்றி அலங்காரம் செய்து பிரதோஷ நாயகர் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். பெட்டி விளக்கு ஒன்று கீழே வைக்க வேண்டும்.

2. உற்சவ பிள்ளையாருக்கு சோடோபசார தீபாராதனைக்கு தயார் நிலையில் வைக்க வேண்டும்.

3. சாயரட்சை வழக்கம்போல் செய்துவிட்டு உபயதாரர் வந்தவுடன் உற்சவ பிள்ளையாருக்கு தூபம் காட்டி சோடோபசார தீபம் காட்ட வேண்டும்.

4. சங்கல்பத்துடன் அர்ச்சனை செய்து பஞ்சமுக தீபம் காட்டி பக்தர்களுக்கு எடுத்து சென்று பின் நகரத்தார் schedule -A முறைப்படி விபூதி பிரசாதம் கொடுத்து உபயதாரர் காளாஞ்சி கொடுக்கவேண்டும்.

5. உற்சவர் மூர்த்திக்கு முன்னால் தரையில் பாய் விரித்து அர்ச்சகர் நடுவில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து Schedule -C முறைப்படி காளாஞ்சி வழங்க வேண்டும்.

6. காளாஞ்சி கொடுத்து முடித்தவுடன் கொம்பு கட்டி சாமியை வாசலுக்கு தூக்கிக் கொண்டு வந்து உபயதாரர் வசம் சிதறு காயை உடைக்க சொல்ல, பின் ராஜகோபுரம் தாண்டி சாமியை நிறுத்திக் கொண்டு கம்பி கதவுக்குப் பின்னால் உள்ள தரையில் பூசணிக்காய் உடைத்து பின் இரு தீவட்டியுடன் சாமி உலா வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

7. சாமி உலா வரும்பொழுது கிராமத்தாரில் ஒருவரால் சாமி திருமேனிக்கு குடை பிடித்து கொண்டு தேங்காய் உடைக்க அரிவாளுடன் ஒரு நபர் செல்லவேண்டும். சூட தட்டு, மணி, விபூதி பாக்கெட், எடுத்துச் செல்ல வேண்டும்.

8. சுவாமி வீதி உலா முடிந்து வந்ததும் பழைய இருப்பிடத்தில் வைத்து ஒற்றை தீபம் காட்டி பின் அலங்காரம் பிரித்து அங்கிகளை லாக்கரில் வைக்க வேண்டும்.

9. மாலையில் போடப்பட்ட பிரசாதத்தை கீழ்கண்ட முறைப்படி கொடுக்க வேண்டும்.

1) அர்ச்சகர்கள் 2
2) காரியக்காரர் 1
3) சிப்பந்திகள் ஆளுக்கு ஒன்று 4+3
4) மேளக்காரர் 2
5) கிராமத்தார் 8x2=16
6) தீவட்டி 2x2=4
7) குடை 1X2=2

Schedule -A

விபூதி பிரசாதம் கொடுக்கும் முறை:

அ. முதலில் அந்தணர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஆ. இரண்டாவது அயலூர் நகரத்தார்க்கு கொடுக்க வேண்டும்..

இ. மூன்றாவதாக நகரத்தாரின் மூத்த வயது உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஈ. நான்காவதாக காரியக்காரர்கும் கொடுக்க வேண்டும்.

உ. ஐந்தாவதாக மற்றவருக்கு கொடுக்க வேண்டும்.

Schedule -B

சூடோஉபச்சார தீபம் காட்டும் முறை:

திரை இருக்கும்பொழுது சாம்பிராணி தூபம் காட்டி, நெய்வேத்தியம் செய்து, பின்

1. அலங்கார தீபம் காட்ட வேண்டும்.
2. புருஷ தீபம்
3. நாகதீபம்
4. நந்தி தீபம்

பின் பஞ்சாட்சர உபசாரம் செய்து பின்

5. கும்ப தீபம்
6. ஐந்து திரி தீபம்
7. நான்கு திரி தீபம்
8. மூன்று திரி தீபம்
9. இரண்டு திரி தீபம்
10. ஒரு திரி தீபம்
11. நட்சத்திர தீபம்
12. ஏகமுக ஒத்த தீபம்
13. குடை
14. கொடி
15. கண்ணாடி
16. விசிறி
17. சாமரம்

பின் அர்ச்சனை முடித்தவுடன். ஏழு முக தீபம் காட்ட வேண்டும் மேற்படி தீபத்தை முதலில் அர்ச்சகர்களுக்கு காட்டி விட்டு பின் நகரத்தாரில் மூத்தவர்களுக்கு காட்டிவிட்டு பின் காரியக்காரர்க்கு காட்டி பின் மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

Schedule -C

நகரத்தார் உற்சவங்களில் காளாஞ்சி கொடுக்கும் முறை:

விபூதி பிரசாதம் அனைவருக்கும் கொடுத்தபின் பிரதான அர்ச்சகர் உற்சவ மூர்த்திக்கு முன்னால் பாய் போட்டு கிழக்கு பார்த்து அமர வேண்டும். கோயில் பட்டர் உடைத்த தேங்காய் மூடி வாழைப்பழம் வெத்தலை பெட்டி அனைத்தும் ஒரு கூடையில் வைத்து பக்கத்தில் வைத்திருப்பார்.

1. முதலில் காளாஞ்சி அந்தணர்களுக்கு கொடுக்க வேண்டும்.
2. இரண்டாவதாக காளாஞ்சி அயலூர் நகரத்தார்க்கு கொடுக்க வேண்டும்.
3. மூன்றாவது காளாஞ்சி நகரத்தாருக்கு வயது மூத்தவரிடம் கொடுக்க வேண்டும்.
4. நான்காவது காரியக்காரக்கு கொடுக்க வேண்டும்.
5. ஐந்தாவது அனைத்து கோவில் சிப்பந்திகளுக்கு கொடுக்க வேண்டும்.
6. மேளகாரர்களுக்கு கொடுக்க வேண்டும்.
7. பண்டாரதிற்கு கொடுக்க வேண்டும். 8. வண்ணானுக்கு கொடுக்க வேண்டும்.
9. சகடை ஓட்டுபவர்க்கு கொடுக்க வேண்டும்.
10. வாணவேடிக்கை காரர்க்கு கொடுக்க வேண்டும்.
11. கிராமத்தார்க்கு கொடுக்க வேண்டும்.
12. மலம்பட்டி ஊரார்களுக்கு கொடுக்க வேண்டும்.

இதில் சம்பந்தப் படவில்லை என்றால் அவர்களுக்கு கொடுப்பதில்லை


விழாக்கள்