நவராத்திரி உற்சவம் விழா நடைமுறைகள்
1) நவராத்திரிக்கு முன்பு செய்ய வேண்டியவை பஞ்சாங்ககாரா ஐயரை கலந்து காப்பு கட்ட நாள், மற்றும் நேரம் குறிக்க வேண்டும். மற்றும் நவராத்திரி உற்சவம் நாட்கள் 9 (அ) 10 ஐ முடிவு செய்ய வேண்டும். 9ம் நாள் உற்சவம் வரும் காலத்தில் தற்போதுள்ள நடைமுறைப்படி 2ம் நாள் உற்சவம் செய்யும் வைரவன் கோவில் காசி செட்டியார் உபயம் வராது என்பதை தெரிவித்துவிட வேண்டும்.
2) கேடயம் சுத்தம் செய்து அலங்கார மண்டபத்தில் அதற்குரிய பெஞ்சு போட்டு துவார பாலகர்கள் சிலைகளை துடைத்து கேடயத்தில் உள்ள மின் விளக்கு எரிவதை சரிபார்த்து வைக்க வேண்டும்.
3) சோடாஉபச்சாரம் தீபச் செட்டுகளுக்கு திரிபோட்டு சரிபார்த்து மணியக்காரர் பொறுப்பில் வைக்க வேண்டும்.
4) உபயதாரர் வசம் போனில் அவர்களிடம் உற்சவத் தேதியை தெரிவித்து கோயிலில் நெய்வேத்திய பிரசாதம் மட்டும் போடுவதை உறுதி செய்து நகரத்தார் பிற பிரசாதத்திற்கு அவர்களே ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டும். அலங்கார மண்டபத்தில் தீபாரதனை 7.00 மணி என்பதையும் சரஸ்வதி பூஜை மற்றும் வெள்ளிக்கிழமை வரும் உற்சவங்களுக்கு 7.30 மணி என்பதும் தெரிவிக்க வேண்டும்.
5) வண்ணானிடம் சொல்லி 30 சிண்டு தயார் செய்ய சொல்ல வேண்டும்.
6) மகர் நோன்புக்கு மாட்டுக்காரரை வரச்சொல்லி பேசி அட்வான்ஸ் கொடுக்க வேண்டும்.
சகடை 2 தயார் நிலையில் வைக்க வேண்டும் அலங்காரப் பொருட்கள் துடைத்து சரிபார்த்து எடுத்து வைக்க வேண்டும். கொலுசாமி அலங்காரம் மாலை 5 மணிக்கு முன்பாக முடிக்க வேண்டும். பின் புஷ்பம் சாத்த வேண்டும்.
சாயரட்சை முடிந்த பின் இரவு 7.00 (அல்லது 7.30 மணிக்கு) அலங்கார மண்டபத்தில் தீபம் காட்ட மணி அடிக்க வேண்டும்.
அலங்கார மண்டபத்தில் கொலுசாமி சோடோபச்சாரம் தீபம் காட்டி பின் உபயதாரர்க்கு சங்கல்பம் பண்ணி அர்ச்சனை செய்து 7 முக தீபம் காட்டி அனைவருக்கும் மேற்படி தீபத்தை எடுத்துச் செல்லவேண்டும்.
பின் நகரத்தார் வழக்கப்படி விபூதி மற்றும் காளாஞ்சி கொடுத்து உற்சவத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஆயுதபூஜைக்கு முதல் நாள் நகரத்தார் சங்கத்தின் சார்பாக வாழைத்தார் 1, தேங்காய் 60, மற்றும் பொரி கடலை அவல் சர்க்கரை 1கிலோ, புளியோதரை 3 படி வடிக்கவும் சுண்டல் 1 கிலோ அவிக்கவும் கந்தரப்பம், வடை தலா 100 சுடவும் வேண்டிய சாமான்களை வாங்க வேண்டும்.
சுயம்பாகம் பன்ன முடியாத சூழ்நிலையில் புளியோதரை சுண்டல் வடை கந்தரப்பம் வெளியில் ஆர்டர் கொடுக்க வேண்டும்.
மாட்டுக்கு கட்ட இரண்டு 4முழ வேஷ்டி வாங்க வேண்டும். ஆயுதபூஜையன்று கோவிலில் கட்ட ரெண்டு வாழை மரமும், மகர்நோன்பு அன்று அம்பு போட 2 வாழை மரங்கள் கட்டச் சொல்லி வைக்க வேண்டும்.
அம்பாள் மகர்நோன்பு அலங்காரத்திற்கு
1) பெரிய கண்ட வாகை மாலை1
2) ரோஸ் சாட்டை 1
3) மஞ்சள் சாட்டை
4) பச்சை சாட்டை 1
5) வெள்ளை சாட்டை 1
6) நெருக்கிகட்டிய உள்மாலை 1
7) கிரீடத்திக்கு கொண்டை மாலை.
8) மாட்டுக்கு 2 மாலையும் எலுமிச்சம்பழம் 4, கதம்பம் 5 முழமும் ஆர்டர் கொடுக்க வேண்டும்.
9) JCB வைத்து மகர்நோன்பு பொட்டலை சுத்தப்படுத்த வேண்டும்.
கோவிலில் பெருமாள் தங்க கொட்டகை போட்டு மின் விளக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மகர்நோன்பு பொட்டலிலும் அம்பு போட கொட்டகை போட வேண்டும்.
நவராத்திரி 10 நாட்கள் முன்னாள் மர ஆசாரி பழைய அம்பு அளவுக்கு 5 மரஅம்பு செய்ய சொல்ல வேண்டும். பின் 5 நாட்களுக்கு முன் கொல்லு ஆசரியிடம் கொடுத்து தகரபூண பிடித்து வாங்கி வைக்க வேண்டும். அம்பு போடும் வில்லை சரிபார்த்து வைக்க வேண்டும்.
ஆயுத பூஜை காளாஞ்சி பை தயார் செய்ய வேண்டும். சரஸ்வதி பூஜை அன்று முதலில் கல்யாண மண்டப பூஜை முடித்த பின் அலங்கர மண்டபத்தில் உபாயத்தாரர் மண்டகப்படி முடித்து, பின் மணியக்காரர் அறை, சங்க அலுவலக அறை ,நகரத்தார் சங்க அக்ரகார வீடு என வரிசையாக தீபம் பார்த்து அக்ரகார வீட்டில் விபூதி கொடுத்து பின் அனைத்து நகரத்தாரையும் அலங்கார மண்டபத்தின் முன் இருக்கையில் அமரவைத்து பாக்குமட்டை பிளேட் மூலம் புளியோதரை , அப்பம், வடை , சுண்டல் அனைத்து ஆண் பெண்களுக்கும் கொடுத்து பின்னர் நகரத்தார் ஆண்களுக்கு தேங்காய் , பழம் போட்ட களஞ்சி பை கொடுக்க வேண்டும்.
மகர்நோன்பு அன்று வெள்ளி கேடயத்தை உள்ளே வைத்துவிட்டு குதிரை வாகனத்தை அலங்கார மண்டபத்தில் வைக்க வேண்டும்.
எண்டோன்மெண்ட் லாக்கரிலிருந்து வெள்ளி அலங்கார சாமான்
1) கடிவாளம்
2) வாள்
3) குத்தீட்டி
4) கேடயம்
5) வில் அம்பு
6) சேணம்
எடுத்து துடைத்து வைக்க வேண்டும்.
குதிரை வாகனத்தில் கட்ட கயிறு கொம்பு எடுத்து வைக்கவேண்டும்.
மகர்நோன்புக்கு புளியோதரை மடப்பள்ளியில் அல்லாது வெளியில் 12 படி பொங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நெய்வேய்த்தியதிற்கு சர்க்கரை சாதம் 1 கிலோ மட்டும் மடப்பள்ளியில் செய்ய வேண்டும்.
மகர்நோன்பு அன்று புஷ்பம் 1 .00 மணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்
மகர்நோன்பு அன்று அம்பாள் குதிரை வாகனத்தில் அமர்த்தி வெள்ளி சேணம் கட்டி வெள்ளி ஆயுதங்களை அம்மாளுக்கு சாற்றி பின் புஷ்ப அலங்காரம் முடித்து 3.00 மணிக்கு தயார் நிலையில் வைக்க வேண்டும்.
பெருமாள் கோவில் சாமி தூங்கும் நேரத்தை உறுதி செய்து அதற்கு ஒரு மணிக்கு பின் அம்பாளுக்கு தீபாராதனை காட்டி வெளியில் தூக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சாமி தூக்குவதற்கு முன்பு புண்ணியசானத்திற்கு வேண்டிய வாழை இலை 2 ,பச்சரிசி 1 கிலோ, மாவிலை, தேங்காய் 2 , செம்பு 1 , தீப்பெட்டி 1 , தண்ணீர் கேன், பெரிய விபூதி பாக்கெட், சூடம் முதலியவையும் வாழை மரத்தில் கட்ட 2 செட் வன்னி இலையும் எடுத்து வைக்க வேண்டும்.
சாமி தூக்கி ராஜகோபுரத்திற்கு நுழையும் முன் காரியக்காரர் தேங்காய் உடைத்து பின் சாமி சகடையில் கட்டி பூசணிக்காய் சூடம் ஏற்றி மூன்று முறை சாமி சகடையை சுற்றி வந்து சகடைக்கு முன்னால் தெருவில் உடைக்க வேண்டும்.
பின் சகடை புறப்பட்டு சின்ன ஊரணிபிள்ளையார் முன் நிறுத்தி அங்கு தீபம் காட்டி பெருமாள் வரும்வரை அம்பாள் சகடையில் அங்கேயே நிறுத்தி வைக்க வேண்டும்.
பெருமாள் வந்தவுடன் அம்பாள் முன் செல்ல பெருமாள் பின்தொடர மகர்நோன்பு பொட்டலுக்கு செல்ல வேண்டும்.
மகர்நோன்பு பொட்டலில் வாழை மரத்திற்கு கிழக்கே நிறுத்தி ஐயர் கீழே இறங்கி வாழை மரத்திற்கு முன் புண்ணியாசனம் செய்து வன்னி இலையை வாழைமரத்தில் கட்ட வேண்டும்.
1செட் பெருமாள் கோவிலுக்கு வாழை மரத்தில் கட்ட கொடுக்க வேண்டும்.
புண்ணியசன தீபாரதனை முடிந்தவுடன் ஐயர் சகடையில் ஏறி தலையில் பரிவட்டம் கட்டி வில் எடுத்து 1 ஒரு அம்பு கிழக்கில் செலுத்தி பின் சகடையை தெற்கு பக்கம் கொண்டு வந்து அடுத்த அம்பை தெற்கில் செலுத்தி பின் மேற்கு பக்கமும், கடைசியாக வடக்கு பக்கமும் அம்பு போட வேண்டும். அம்பு போட்டு முடித்தவுடன் சகடை கிழக்கில் நிறுத்தி ஐயர் பரிவட்டத்துடன் இறங்கி 5வது அம்பை நாண்ஏந்தி அதை வாழைமரத்தில் குத்தி சிறு வாழைநார் வன்னி இலையுடன் சகடைக்கு திரும்ப வேண்டும்.
பொதுமக்கள் அதன் பின் வாழை மரத்தில் அம்பு குத்தி பிரசாதம் எடுத்து சென்ற பிறகு பெருமாளுடன் இணைந்து தீபாராதனை காட்டி விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும்.
பின் அனைவருக்கும் அவ்வாறு கொடுத்த பின் அம்பாள் முன் செல்ல பெருமாள் பின்தொடர சிவன் கோவிலை நோக்கி வர வேண்டும்.
பஞ்சாயத்து போர்டு பக்கத்தில் சகடை மேலே ஏறி பள்ளிக்கூடம் வழியாக தபால் ஆபீஸ் வீதி திரும்பி ஐயர் அக்ரகாரம் வழியே சிவன் கோவில் முன்னாள் சகடை நிற்க வேண்டும். சுவாமிக்கு ஐயர் ஆராத்தி எடுத்து குளிக்கச் சென்ற பின் மேளக்காரர் முதலியவர்களால் சாமியை 3 முறை சுற்றி வந்தபின் அம்பாளையும் பெருமாளையும் இறக்கி அலங்கார மண்டபத்தில் வைக்க வேண்டும்.
மண்டகப்படி நெய்வேத்தியம் பெருமாளுக்கும் அம்பாளுக்கும் தயாரானவுடன் அம்பாளுக்கு சோடாஉபசாரம் தீபம் காட்டி பின் நகரைபொதுவிற்காக காரியக்காரர் சங்கல்பம் செய்து, அர்ச்சனை செய்து பின் நகரத்தாரின் வழக்கப்படி விபூதி, காளாஞ்சி பிரசாதம் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
பின் பெருமாளுக்கு 3 தீபம் காட்டி உபயதாரர் மாவிளக்கு மற்றும் அர்ச்சனை செய்து தீர்த்தம் துளசி கொடுத்து நகரத்தார் காளாஞ்சி பிரசாதம் கொடுத்த பின் இரண்டு சாமிகளையும் மறுபடி சகடையில் தூக்கி கட்டவேண்டும், அம்பாள் பெருமாளும் புறப்பட்டு சின்ன ஊரணி பிள்ளையார் முன் ஒன்றுக்கொன்று பக்கத்தில் நிற்க பிள்ளையாருக்கு தீபாராதனை காட்டி பின் அரச மரத்தின் பக்கத்தில் அம்பாள் முன் நிற்க பெருமாள் சா.வீர.சித மண்டகப்படி இடத்திற்கு பக்கத்தில் நிற்க இரு சாமிகளுக்கும் தீபாராதனை காட்டி பின் அம்பாள் சகடையிலிருந்து பெருமாளுக்கு மரியாதை செய்து வழி அனுப்ப தட்டில் பட்டு 1 , மாலை1, தேங்காய் பழம் எடுத்துக் கொண்டு பெருமாள் சகடைக்கு பக்கத்தில் சென்று பெருமாளுக்கு மரியாதை செய்து தீபம் காட்டி அதன் பின் அம்பாள் சிவன் கோவிலை நோக்கி புறப்படவும் பெருமாள் பெருமாள் கோவிலை நோக்கி புறப்பட செய்ய வேண்டும்.
அம்பாள் சிவன் கோவிலுக்கு வந்தவுடன் சகடையில் இருந்து இறக்கி அலங்கார மண்டபத்தில் வைத்து ஒற்றை தீபம் காட்டி அலங்காரம்பிரித்து பின் மூலவருக்கு சென்று தீபம் காட்டி காப்பு அவிழ்த்த பின் உற்சவருக்கு காப்பு அவிழ்த்து பின்பு அவிழ்த்த இரண்டு காப்புகளையும் தட்டில் வைத்து பாலிகை வைக்கிற பூஜை அறையிலிருந்து முன்னதாக வந்து தீபம் காட்டி பாலிகைகளையும் மேற்படி தட்டில் வைத்து மேற்படி தட்டுடன் அய்யர் உள்பிரகாரம் வந்து ராஜகோபுரம் வழியாக குளத்தில் கரைத்து பாலிகை பிரசாதம் கொடுத்து தீபம் காட்டி உற்சவத்தை முடிக்கவேண்டும்.