உபயதாரர்கள்:
1) சஷ்டி விரதம் இருந்து தினசரி மேற்படி 6 நாட்களுக்கு கோவில் மூலவர் சண்முகப் பெருமானுக்கு உச்சிக் காலத்துக்கு முன் அபிஷேகம், அர்ச்சனை, பிரசாதம் செய்து வழிபடும் நகரத்தார்கள்.
2
) சூரசம்கார நிகழ்ச்சிக்கு ஏற்கனவே வைப்பு நிதியை நகரத்தார் சங்கத்தில் ஏற்படுத்தி அதன் மூலம் சம்கார தின விழாவைக்கொண்டாடும் கா.ப. குடும்பத்தார்.
3) சூரசம்காரத்தன்று காலை மற்றும் இரு உபயதாரர்கள் அபிஷேகம் முடிந்த பின் சண்முகருக்கு சந்தன காப்பு சாற்றி அர்ச்சனை செய்து வழிபடும் நச்சாந்துபட்டி வைரவன் கோவில் (லால்குடி) பழனியப்ப செட்டியார் குடும்பத்தார்கள்.
நிகழ்ச்சி விபரம்:
சஷ்டி ஆரம்பதினத்திலிருந்து தினசரி உபயதாரர்கள் அபிஷேக, ஆராதனை பிரசாரத்திற்கு மேற்படி குழு அங்கத்தினர்கள் நேரடியாக குருக்களிடம் கொடுத்து செய்துகொள்வார்கள்.
கந்தர்சஷ்டி உற்சவம் பூர்த்தியாகும் 6வது நாளன்று சஷ்டி விரதம் இருக்கும் நகரத்தார்கள் குழுவுடன் சம்கார உபயதாரர் மற்றும் கா.ப.குடும்பத்தினரும் சேர்ந்து உச்சிக் காலத்திற்கு முன் அபிஷேகம் செய்யவேண்டியது. மேற்படி அபிஷேக பொருட்கள் கா.ப.குடும்பத்தார் சார்பாக உள்ள புஷ்பம், மாலை, நைவேத்திய மளிகை கோவிலில் இருந்து கொடுக்கப்படும்.
மேற்படி இரு உபயதாரர்கள் அபிஷேகம் முடிந்தபின் கா.ப.குடும்பத்தார்களுக்கு சங்கல்பம் செய்து அர்ச்சனை (2செட்) செய்ய வேண்டும். அவர்களுடைய நைவேத்திய பிரசாதம் 1/2கிலோ, பாசிப்பருப்பு பாயாசம், 1/2 கிலோ வடை போட்டு நைவேத்திய முடிந்ததும் அனைத்தையும் மேற்படி உபயதாரரிடம் கொடுத்து விட வேண்டும்.
காலை மயில் வாகனத்தை அலங்கார மண்டபத்தில் வைத்து, முருகன் உற்சவவிக்ரகம் மட்டும், மயில் வாகனம் மீது கட்டவேண்டும். வள்ளி, தெய்வானை விக்கிரகங்களையும் திருக்கல்யாணத்திற்கு தோதாக தெற்குப்பகுதியில் தனியாக வைக்க வேண்டும்.
சூரன் பொம்மையை எடுத்து வந்து துடைத்து யானைத் தலையை மட்டும் பொருத்தி, மற்ற சிங்கம், சூரன் தலையை தனியாக வைத்து, சூரனுக்கு காவி வேஷ்டி, துண்டுடன் அலங்காரம் செய்து அலங்கார மண்டபத்தில் தனியாக வைக்க வேண்டும்.
வீரபாகு சிலையையும் சின்ன கேடயத்தில் கட்டி அலங்காரம் செய்து முருகருக்கு அருகில் அலங்கார மண்டபத்தின் மேலே வைக்க வேண்டும்.
மாலை சாயரட்சை முடிந்தவுடன் வைரவன் கோவில் பழனியப்ப செட்டியார் குடும்பத்திற்கு அர்ச்சனை செய்து அனைவருக்கும் சண்முகர் சன்னதியில் நகரத்தார் வழக்கப்படி விபூதி கொடுக்க வேண்டும்.
மேற்படி தீபராதணை முடிந்தவுடன் அலங்கார மண்டபத்தில் முருகருக்கு அடுக்கு தீபம், நாகதீபம், ஒற்றை தீபம் காட்டி மயில் வாகனத்திற்கு கொம்பு கட்டி, உபயதாரர் சிதறு தேங்காய் உடைத்து பின் வாகனத்தை சகடையில் கட்டி டிராக்டரில் சேர்க்க வேண்டும்.
சுவாமி புறப்படுவதற்கு முன் முதலில் சூரனை வெளியில் தூக்கி, அடுத்து வீரபாகு கேடயத்தை தூக்கி வெளியில் கொண்டு போகவேண்டும் பின் சிதறுதேங்காய் உடைத்து முருகர் மயில் வாகனத்தை தூக்கவேண்டும்.
சூரன் முருகரை மூன்று முறை சுற்றி வந்த பின் சூரன் முன்செல்ல, வீரபாகு தொடர முருகர் வாகனத்தில் வீதி உலா வர வேண்டும்.
வீதி உலா முடிந்தபின் முருகரும், வீரபாகு கேடயமும் கிழக்குப் பார்த்து ராஜகோபுரம் முன் நிற்க சூரன் கேடயம் மேற்கு பார்த்து (விளக்கு கம்பத்திற்கு அருகே) நிற்க வேண்டும்.
குருக்களுக்கு பரிவட்டம் கட்டி நகரத்தார் பின்தொடர சம்கார பெரிய வேலை, சண்முகருக்கு தீபம் காட்டி, அம்மன் சன்னதிக்கு சென்று பாதத்தில்வைத்து பின் ராஜகோபுரம் வழியாக வந்து முருகன் சகடை முன் குருக்கள் நிற்க வேண்டும்.
சூரன் முருகரை ஒரு முறை சுற்றி வந்த பின் குருக்கள் பரிவட்டோதோடு பெரிய வேலை எடுத்து சூரனை நோக்கி வந்து மேற்படி வேல் முனையை தரையில் நின்றபடி சூரனின் யானைத்தலைக்கு பக்கத்தில் கொண்டு செல்ல யானைத்தலை எடுக்கப்பட வேண்டும்.
பின் குருக்கள் முருகன் சகடைக்கு பக்கத்தில் வந்து நிற்க, சூரன் பின் சிங்கத்தலையுடன் முருகரைச் சுற்றி வந்து மீண்டும் விளக்கு கம்பம் அருகே மேற்கு பார்த்து நிற்க வேண்டும்.
சென்ற மாதிரியே சிங்கத் தலையும் கொய்யபட வேண்டும். பின் சூரன் அசுரத்தலையுடன் முருகரை சுற்றி வந்து நிற்க மேற்படி தலையும் சென்ற தடவை மாதிரியே கொய்யப்பட்டு, சேவலைப் பறக்கவிட்டு சூரன் சிரசு உள்ள இடத்தில் மாங்கொத்து வைக்க வேண்டும்.
சம்காரம் முடிந்தபின் முருகருக்கு தீபம் காட்டி வேலை மூலவர் சண்முகரிடம் சேர்க்க வேண்டும். முருகர் உற்சவ விக்ரகத்தை அலங்கார மண்டபத்தில் வள்ளி தெய்வானை விக்ரகங்களுடன் சேர்த்து கேடயத்தில் வைத்து திருக்கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
குருக்கள் குளித்து வந்த பின் முருகர், வள்ளி, தெய்வானை, உற்சவர்களை கேடயத்தில் தெற்குப்பார்த்து வைத்து கட்டியபின் கோவிலில் வாங்கி வைக்கப்பட்ட சீர்வரிசைகள்
1) ஒரு 9x5 வேஷ்டி
2) 2 சேலை
3) 4 கல்யாண மாலை
4) திருமாங்கல்யம் 2 செட்
5) பருப்பு தேங்காய் 2 தட்டில்
ஆகியவற்றை வைத்து கோவிலில் உள் பிரகாரத்தை மேளதாளத்துடன் உபயதாரர் சுற்றி வந்து முருகரை சுற்றி வந்து பின்னர் குருக்களிடம் கொடுக்க வேண்டும்.
பின் புண்யாவாசனம் செய்து, ஹோமம் வளர்த்து, காப்புகட்டி, திருமாங்கல்ய பூஜை செய்து பின் உபயதாரர் 2 திருமாங்கல்யத்தையும் மஞ்சள் பூசின 2 தேங்காய் மீது வைத்து பக்தர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி, பின்னர் திருப்பூட்டி, மாலை மாற்றி பழம், பால் நெய்வேத்தியம் செய்து ஆரத்தி எடுத்து, மொய் எழுதி, சொடோபச்சாரம் தீபம் காட்டி, உபயதாரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
பின்னர் 7முக தீபம் காட்டி அதை அனைவரிடம் காண்பித்து பின் நகரத்தார் வழக்கப்படி விபூதி, காளாஞ்சி கொடுத்து பின் பிரசாதம் வழங்க வேண்டும்.
சம்ஹார மற்றும் திரு கல்யாணத்திற்கும் பிரசாதங்கள் உபயதாரருக்கு கோயிலில் இருந்து
• புளியோதரை ஆறுபடை6 பட்டை.
• சர்க்கரை 3 பட்டை.
• வடை 11.
• சுண்டல் சிறிது இதற்ககாகவும்.
மற்றும் நகரத்தார் சாமி தூக்குபவருக்காகவும் மொத்த பிரசாதம் போட வேண்டியவை
• புளியோதரை 12 படி
• சர்க்கரை 2 படி
• கடலை 6 கிலோ
• வடை 1 கிலோ
• காலாஞ்சிக்கு தேங்காய் 60
• பழம் 100
• வெற்றிலை பாக்கு
• புஷ்பம் உற்சவர்கு சாமி அலங்காரத்திற்கும்
• மற்றும் 4 கல்யாண மாலை