ஆருத்ரா தரிசனம்

கோவில் / விழா நடைமுறைகள் / ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

ஒரு வாரம் முன்னதாக உபயதாரரிடம் தேதி,கிழமை தெரிவிக்கவேண்டும்.

இரண்டு நாட்கள் முன்னதாக கிராமத்தார்களுக்கும் மலம்பட்டி ஆட்களுக்கும் சுவாமி தூக்க பண்டாரம் மூலம் சொல்லி அனுப்ப வேண்டும். வண்ணானிடம் 4சிண்டு வாங்கி வைக்கவேண்டும்.

முதல்நாள் கேடயம் மூன்றும் உற்சவ தினத்தன்று சுவாமி விக்கிரகங்களை மூன்றும் அபிஷேகம் செய்வதற்கு தோதான முறையில் அலங்கார மண்டபத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும்.

அபிஷேக மேடையையும் அதோடு சேர்த்து கொண்டு வந்து வைத்து தண்ணீர் வருவதற்கும் அபிஷேக நீர் வெளியேற்றுவதற்கும் பைப் கணெக்சன் கொடுத்து வைக்க வேண்டும்.

டிராக்டர் இரண்டு சகடை பூட்டுவதற்கு ஏற்றாற்போல் சொல்லி வைக்க வேண்டும்.

திருவாசகம் படிக்கும் (ஓதுவாருக்கு) நபருக்கு சொல்லி அனுப்புவதோடு , அவருக்கு அணிவிக்க சால்வை ஒன்று வாங்கி வைக்க வேண்டும்.

ஐந்து படி திருவாதிரை களி ,அதற்குரிய கூட்டு மற்றும் பத்துபடி புளிசாதத்திற்கு தேவையான பொருட்கள் அதை செய்வதற்குரிய சுயம்பாகமும் உபயதாரர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அபிஷேகம் செய்யத் தேவையான பொருட்களும் திருவாசகம் நெய்வைத்திய பழங்களும் மூன்று அர்ச்சனைக்குரிய பொருட்களும் வந்து சேர்வதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுவாமி புறப்படுவதற்கு முன் மோதுகட்டி இழுக்க வேண்டும் .

தரிசனத்தன்று காலை 8.00 மணிக்கு ஜபம் ஆரம்பித்து பின் அபிஷேகம் 9.30 க்குள் செய்ய வேண்டும். அதன்பின் அலங்காரம் முடிந்ததும் 10.30 மணி அளவில் அடுக்கு தீபமும் , ஒற்றை தீபமும் காண்பிக்கவேண்டும். பிறகு உபயதாரரிடம் சங்கல்பம் வாங்கி அர்ச்சனை செய்யவேண்டும் அதன்பின் திருவெம்பாவை பாடல் 20ம் படிக்க வேண்டும்.

ஓவ்வொரு பாடலும் முடிக்கும் தறுவாயில் வெற்றிலை ,பாக்கு , வாழைப்பழம் நைவைத்தியம் செய்து நடராஜருக்கு அர்ச்சனை செய்து தீபம் காண்பிக்க வேண்டும்.

திருவெம்பாவைக்கு பிறகு ஐந்துமுக தீபம் பார்த்து அனைவரிடமும் எடுத்து செல்ல வேண்டும். நகரத்தார் முறைப்படி விபூதி பிரசாதம் வழங்கி திருவாசகம் படிப்பவருக்கு சால்வை போத்தி காளாஞ்சி கொடுக்க வேண்டும்.

உபாயதாரருக்கு அதன்பின் காளாஞ்சி கொடுக்க வேண்டும். பின் நைவைத்தியப் பிரசாதம் களி மற்றும் கூட்டு அனைவருக்கும் வழங்க வேண்டும். சுவாமி புறப்பாட்டுக்கு முன் சிதறுகாய் உடைக்கவேண்டும்.

மாணிக்கவாசக உற்சவரை கேடையத்தில் வைத்துகட்டி கிராமத்தார்கள் தோளில் சுமந்து செல்ல வேண்டும்.

நடராஜர் , அம்பாள் விக்கிரகங்களை கேடயத்தில் கொண்டு சென்று டிராக்ட்டரில் வைத்து கட்ட வேண்டும். தீவட்டியுடன் வீதி உலா வரவேண்டும். திருவீதி உலா முடிந்து கோவில் வந்தவுடன் மேற்படி சாமிகளுக்கு தீபம் காட்டி விக்கிரகங்களை அதன் இருப்பிடத்தில் சேர்க்க வேண்டும்.

பிறகு காரியக்காரர் , கோவில் சிப்பந்திகள் கிராமத்தார் , மலம்பட்டி ஆட்கள் அனைவருக்கும் பட்டை சாதம் விநியோகிக்க வேண்டும்.

*(பி.கு) 2022 ல் கால அவகாசம் இல்லாததால் திருவெம்பாவை ஓத முடியவில்லை.


விழாக்கள்